Sunday, October 20, 2013

தினகரன் ஓபன் டாக் : இளங்குற்றவாளிகள் உருவாவது ஏன்? - அரசு சீர்திருத்தப் பள்ளி ஆசிரியர், முளங்குழி பா.லாசர்

மார்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முளங்குழி பா.லாசர். இளம் குற்றவாளிகளுக்கான அரசு சீர்திருத்தப் பள்ளி ஆசிரியராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய இவர் சிறந்த இலக்கியவாதி. குமரி முத்தமிழ் மன்ற தலைவர், குமரி மாவட்ட தமிழாசிரியர் கழக தலைவர், தொல்காப்பியர் கழக தலைவர், குமரி மாவட்ட இலக்கிய கூட்டமைப்புகள் துணை தலைவர் என பல பொறுப்புகளை தற்போதும் வகித்து வருகிறார். 1975&ம் ஆண்டு முதல் இலக்கிய மன்றம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் என ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியது மட்டுமின்றி தற்போதும் ஓய்வின்றி பேசி வருகிறார். அம்பை தமிழ் இலக்கிய பேரவை சார்பில் சிங்கம்பட்டி மன்னரிடம் இருந்து இலக்கிய மாமணி விருது பெற்றவர். நாடக ஆசிரியர், நடிகர் என்ற பல்வேறு முகங்கள் இவருக்கு. தற்போது புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் வசித்து வரும் அவரை அவரது இல்லத்தில் சந்தித்த போது அவர் கூறியதாவது.&
இன்று நமது சமூகம் குற்றவாளிகளை 3 வகையாக பிரித்துள்ளது. அதில் ஒரு பிரிவுதான் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகள். இளம் குற்றவாளி ஒருவர் கொலை செய்தால் கூட அவருக்கு அதிக பட்ச தண்டனை 5 வருட சிறைத்தண்டனை மட்டுமே. 7 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் எத்தகைய குற்றம் செய்தாலும் அவனை சீர்திருத்த பள்ளியில் கூட அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை. அந்த சிறுவர்களை பெற்றோர் கூடத்தான் தங்க வைக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. 12 வயதுக்கு மேல் ஒரு சிறுவன் செய்யும் குற்றத்தின் தன்மையை பொறுத்துதான் போலீஸ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
சமீபத்தில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. நிர்பயா என்ற அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளில் ஒருவன் 18 வயது நிரம்பாதவன். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, மாணவியின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை செலுத்தியவன். அந்த கொடுஞ் செயல்தான் அந்த மாணவியின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. இப்படிப்பட்ட ஒரு குற்றவாளிக்கு வயதை காரணம் காட்டி குறைந்த தண்டனை வழங்கியது இன்றும் இந்தியாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடுஞ்செயல் இளம் குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள். ஒரு தாய் குழந்தையை பெற்றெடுக்கும் போது நல்ல குழந்தையாகத்தானே பெற்றெடுக்கிறாள். பிறகு, தாய் தந்தையரின் வளர்ப்பு முறைதானே நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் மாற்றுகிறது.
இளம் குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் தாயை இழந்தவர்கள். இந்த பிள்ளைகள் தங்களை கண்டிக்க ஆளில்லாமல் தன் மனம் போனபடி செயல்பட துவங்குகின்றனர். அடுத்ததாக தந்தை வெளியூர் வேலைக்கு சென்றிருப்பான். தாய் வேறு ஒருவனை வீட்டில் அழைத்து வந்து அவனோடு கொஞ்சி குலாவுவதை பார்த்த மகன் இந்த சமுதாயத்தின் மீது வெறுப்புற்று சமூக விரோதியாக மாறுவான். மனைவி இறந்த உடன் கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். சித்தி என்று பாசத்துடன் வரும் பிள்ளையை கொடுமைப் படுத்துவதுடன், பசிக்கு உணவு கொடுக்கமாட்டார்கள். பசி தாங்காமல் திருடத் துவங்கி கடைசியில் திருடனாக மாறி விடுகின்றனர். பல இடங்களில் கொலையாளியாகவும் மாறிவிடுகின்றனர்.
சில பெண்கள் கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் உதறித்தள்ளி விட்டு கள்ளக்காதலனோடு ஓடி விடுகிறார்கள். பிள்ளைகளை ஆதரித்து வளர்க்க உறவினர்கள் முன்வர மாட்டார்கள். இந்த பிள்ளைகள் இளம் குற்றவாளிகளாகும் நிலையும் ஏற்பட்டதுண்டு. வறுமையின் காரணமாக பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை திருடராக்கும் செயலுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்யும் போது, தன் குழந்தையுடன் புதுகணவன் வீட்டுக்கு செல்லும் போது பல இடங்களில் குழந்தையை கொடுமைப் படுத்துவதால், பாதிக்கபடும் குழந்தைகள் அந்த வீட்டை விட்டு வெளியேறி குற்றவாளிகளாக மாறும் நிலையும் ஏற்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட கொடுமையான சம்பவம் என்னவென்றால், திருமணமான பிறகு கணவர் வெளியூரில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும்போது, வீட்டில் தனிமையில் வாடும் சில மனைவிகள், படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் சில இளம் பெண்கள் தங்களது காம இச்சைக்காக சிறுவர்களை தகாத உறவுக்கு பயன் படுத்திவருவது பல இடங்களில் நடந்தேறி வருகிறது. காரணம் சிறுவர்களை பயன்படுத்தினால் அது வெளி உலகுக்கு தெரிவதில்லை என்பதுதான். இப்படிப்பட்ட பெண்கள் சிறுவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கைவிட்டு விடுவார்கள். இதனால் மன ரீதியாக பாதிப்படையும் சிறுவர்கள் அடுத்த கட்ட காம சுகத்துக்காக விலை மாதர்களை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். விலை கொடுத்து வாங்கும் சுகத்துக்கு பணம் வேண்டுமே. அதற்காக திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயல்களில் ஈடு படுகின்றனர். தன்னுடைய கள்ள காதலுக்கு மகன் இடையூறாக இருந்தான் என்ற காரணத்துக்காக பொய் குற்றச்சாட்டு கூறி சிறைக்கு அனுப்பிய சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்றது என்பது அதை விட அதிர்ச்சியான சம்பவம். ஒரு குடும்பத்தில் உயர்ந்த உத்தியோகம் பார்க்கும் நபர்கள் ஆத்திரத்தில் கொலை போன்ற தவறுகள் செய்யும் போது ஒட்டு மொத்தமாக குடும்பமே பாதிப்படையும் என்பதால் குற்றத்தை தான் செய்ததாக ஏற்று சிறை சென்ற இளம் குற்றவாளிகளும் ஏராளம் பேர் உள்ளனர். இப்படி ஆடம்பர வாழ்க்கைக்காக, சினிமா மோகத்தால், பெற்றோரின் அளவுக்கு மீறிய கண்டிப்பால், அளவுக்கு மீறிய செல்லத்தால், என இளம் குற்றவாளிகள் உருவாகும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இந்த சமுதாயத்தில் இளம் குற்றவாளிகள் உருவாவதை கண்டிப்பாக நம்மால் தடுக்க முடியும். கூட்டுக் குடும்ப முறைகள் இன்று அடியோடு நமது சமுதாயத்தில் மறைந்து விட்டது. கடந்த காலங்களில் தாத்தா, பாட்டிகள் சிறு பிள்ளைகளுக்கு நீதி கதைகளை போதிப்பார்கள். இன்று குடும்பங்களில் தாத்தா பாட்டிகளை பார்க்க முடிவதில்லை. தற்போது தாயும் தந்தையும் உயர்ந்த பதவிகளில், உயர் நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் பணி செய்பவராக காணப்படுகின்றனர். இப்படிபட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காசு பணத்தை அள்ளி வீசி, அவர்கள் செய்யும் சிறு குற்றங்களை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு பிறகு பெரும் குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. பெற்றோரின் கண்காணிப்பு, அரவணைப்புடன் ஆன்மீகத்தை கண்டிப்பாக பிள்ளைகள் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும். திறமையான மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளிகளில் கூட சில ஆசிரியர்கள் நன்றாக படிக்கும் மாணவர்களை புகழ்ந்து, படிக்காத மாணவர்களை மட்டம் தட்டும் செயல் நடப்பதுண்டு. மாணவர்களை ஆசிரியர்கள் சாபம் போடுவது, இருபால் மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்துவது போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும். பெண் இளம் குற்றவாளிகள் கூட நமது சமுதாயத்தில் உருவாகி வருவது வேதனையான விஷயம். அதிக செல்லம் கொடுத்து வீட்டில் வளர்க்கும் பெண்கள் சிறு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி சமூக விரோதிகள் கையில் சிக்கி சின்னா பின்னமாகி, விபச்சாரியாக மாற்றப்பட்டு, கடைசியில் பயங்கர குற்றவாளிகளாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தமிழகத்தில் 9 அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் உள்ளன. குற்றச்செயல் புரிந்து சீர் திருத்த பள்ளிகளில் படித்த ஏராளம் மாணவர்கள் இன்று மிகவும் உயர்ந்த அரசு பொறுப்புகளில், மற்றும் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களாக மாறி இருக்கிறார்கள். அதே வேளையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து நல்லவனாக திருந்திய ஒருவனை மீண்டும் இந்த சமூகம் குற்றவாளியாக்கிய அனுபவங்களும் ஏராளம் உண்டு.
அரசு சீர்திருத்தப் பள்ளி ஆசிரியர்
முளங்குழி பா.லாசர்

No comments:

Post a Comment