Monday, August 17, 2015

புலம்பெயர் தமிழர்கள் தாய் மொழியையும், பண்பாட்டையும் ... அழிய விடாமல் - திருமதி. வாணமதி @ மதிவதனி

தமிழகத்தில்
தாய்மொழி அழிகிறதா.. இல்லை அழிக்கப்படுகிறதா.. 

என நாம் விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உலகில் புலம்பெயர் நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தனது தாய் மொழியையும், பண்பாட்டையும் மறக்காமல் கடைபிடித்து, அழிய விடாமல் தடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஐரோப்பிய யூனியனின் அழகு நாடான சுவிட்சர்லாந்தில் தமிழாசிரியையாக பணி புரிந்து  வருகிறார் வாணமதி. குமரி மாவட்டத்தில் குமரி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை தினகரன் வணக்கம் திங்கள் பகுதிக்காக சந்தித்த போது, அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

முதலில் உங்களை பற்றி சொல்லுங்களேன்..
எனது இயற்பெயர் மதிவதனி. வானவெளியில் வெடித்து சிதறும் வாண வேடிக்கை போன்று வாழ்க்கையும் சில நிமிட அழகு என்ற எண்ணத்தில் வாணமதி என்ற பெயரை நானே சூட்டிக் கொண்டேன். பிறந்தது மதுரையில். வளர்ந்தது, படித்தது எல்லாம் இலங்கையில், தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழாசிரியையாக பணிபுரிகிறேன். மட்டுமின்றி ஜெர்மனியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஜெர்மன் ஐபிசி தொலைகாட்சியில் குழந்தைகளுக்கான தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சுவிட்சர்லாந்து பள்ளியில் உடல்நலக்கூறு ஆசிரியையாகவும் பணிபுரிகிறேன்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி உலக நாடுகளில் பரவி அனைவராலும் பேசப்படாத காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்..
மொழி என்பது மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கும், சிறப்பான வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமைவது. அதிலும் நமது தமிழ்மொழி வளமான இலக்கண, இலக்கிய சிறப்பினால் உலக மொழிகளை எல்லாம் ஓரம் கட்டுகிற அளவில் ஊடுருவி செல்கிறது. தாய் தமிழ் மொழியையும், தாலாட்டையும் தாய்ப்பாலுடன் கற்ற நாமே அந்த மொழிக்கு மதிப்பளிக்கவில்லை. தாய் வீட்டில் மதிப்பில்லாத ஒன்று, புகுந்த வீட்டில் அருகி வருவது இயற்கை தான். அதிலும் தற்போதைய சூழலில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றை சிந்திக்கும் மக்கள் தாய்மொழி வளர்ச்சி குறித்து சிந்திப்பதில்லை. பல காரணங்களில் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

தற்போது தமிழ் மொழியின் நிலை உலக அளவில் எப்படி உள்ளது?
இனி வரும் காலங்களில் தமிழ் அழிந்து விடும் என்ற ஆதங்கம் அனைவர் மனதிலும் தோன்றியது உண்மை. ஆனால் புலம் பெயர் தமிழர்களால் தமிழ் கட்டிக் காக்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய யூனியனில் பல்கலைகழகங்களில் தமிழ் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் தற்போது அங்குள்ள பல்கலைகழகங்களில் தமிழ் பாடம் நடத்தப்படுகிறது. அமெரிக்க நாட்டு பல்கலைகழகங்களிலும் முதற் கட்டமாக தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் மொழிக்கு எந்த
வகையில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது?
தாய் மொழிக்கு எவ்வளவு மதிப்பு அளிக்கப்படுகிறது என்பதை சுவிட்சர்லாந்து நாட்டை பார்த்து தான் அனைவரும் படிக்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர்களின் டொச் மொழி, பிரஞ்ச், இத்தாலி, லத்தின் போன்ற 4 மொழிகள் அரசின் ஆட்சி மொழிகள். இதில் 64 சதவீதத்திற்கும் அதிகமானோர் டொச் மொழியை தான் பேசுகின்றனர். இருப்பினும் அங்கு மொழி சிறுபான்மை என்ற பிரிவினை வாதம் இல்லை. இதற்கும் மேலாக முக்கியமாக பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட குழந்தைகள், அது எந்த  மொழியாக இருந்தாலும் சரி.. ஆரம்ப வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தாய் மொழியை கண்டிப்பாக கற்றிருக்க வேண் டும். இது அங்குள்ள அரசின் உத்தரவு. காரணம் தாய் மொழியை பயிலாத குழந்தைகளால் பிற மொழியை புரிந்து கொள்ள முடியாது என்று அங்குள்ள அரசு கருதுகிறது. இதற்காக அரசு பள்ளிகளிலேயே வாரத்தில் இரண்டு நாட்கள் தமிழ் குழந்தைகளுக்காக தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்னொரு தகவல் என்னவென்றால் சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் 5300 மாணவர்கள் தமிழில் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் பிற மொழி மோகத்தால் தாய் மொழியை புறக்கணிப்பதாக கூறப்படும் புகார் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளர்கின்ற ஒரு தமிழ் குழந்தைக்கு இருக்கும் தமிழ் அறிவுத்திறன் இன்று இந்தியாவில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு இல்லை என்பது வேதனையின் உச்சகட்டம். இது பெற்றோர்களின் அறியாமையால் நிகழ்வது.. இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகும், மக்களின் அடிமை மனோபாவம் இன்னும் அகலவில்லை என்பதற்கு இதையும் உதாரணமாக கூறலாம். பிற மொழியில் கல்வி கற்றால் தான் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும் என நினைக்கின்றனர். உலகத்திலேயே அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அழுக்கு படிந்த உடைகளுடன் காட்சிபடுத்தும் நிலை நமது நாட்டில் மட்டுமே உள்ளது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை தரம் குறைந்தவர்களாக மதிப்பிடும் நிலை உள்ளது. கல்வி முறையில் பாகுபாடு இங்கு அதிகமாக காணப்படுகிறது. இங்குள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை காரணம் காட்டி கல்வி முறையிலும் ஏற்றத்தாழ்வுகளை திணிக்கின்றனர். இது களையப்பட வேண்டும். மாற்றான் மொழியின் மோகத்தில் மயங்காமல் நமது தாய் திருநாட்டின் பெருமையை நம் தலைமுறைகளுக்கு தெரியபடுத்தி நமது பாரம்பரியத்தை கட்டி காக்க வேண்டும்.

இதற்கான தீர்வு என்ன?
தமிழ் கற்றால் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற எண்ணத்தை அகற்ற தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தாய்மொழிக் கல்வி என்றாலே அது வேதனையான செயல் என்று இளைஞர்கள் ஒதுங்கும் நிலையை களைய வேண்டும். தாய் மொழியில் வேலை வாய்ப்புகளுடன் கூடிய கல்வியை கட்டாயம் போதிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டம் அறிமுகபடுத்த வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது..
மனிதர்களின் எண்ணற்ற சிந்தனைகள் தான் குறிக்கோள்களை தோற்றுவித்து இறப்பு வரை கொண்டு செல்கிறது. இன்றைய இளைஞர்களின் குறிக்கோள் குறுகிய வட்டத்துக்குள் உள்ளது. இளைஞர்கள் சுயமாக தங்கள் குறிக்கோளை வெளிபடுத்தாமல் இன்னொருவன் வழிகாட்டலின் தன்மைக்கு தகுந்தபடி குறிகோளை பொய்யாக உருவாக்கி கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை ஏக்கம் நிறைந்த போராட்டகளமாக மாறி விடுகிறது.. தொழிலதிபராவது, மற்றவர் வியக்குமளவில் பணம் சேர்ப்பது, வங்கியில் பணம் சேர்ப்பது அல்ல குறிக்கோள். இந்த சமுதாய நலனில் அக்கறை கொண்டு சமூக தேவைகளுக்கு ஏற்ப குறிக்கோளை புத்துயிராக்கி அதனால் ஏற்படும் தடைகளை தாண்டி செல்பவர்களே சாதிக்க பிறந்தவர்கள். இளைஞர்களின் குறிக்கோள் உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், பெருந்தன்மை உடையதாகவும், சுயநலமில்லாததாகவும் இருக்க வேண்டும்.

நன்றி 
தினகரன் - ஓபன் டாக்
‚சந்திப்பு ஆர். பி. ஜாண்

பார்க்க: http://epaper.dinakaran.com/index.php?rt=email/viewemail&articlename=MjAxNTA4MTdhXzAwNzEwODAwNQ==

குமரி முத்தமிழ் மன்ற கூடுகை - ஆகஸ்ட் 2015

குமரி முத்தமிழ் மன்ற கூடுகை - ஆகஸ்ட் 2015

சிறப்பு விருந்தினர்: திருமதி. வாணமதி @ மதிவதனி, 
தமிழாசிரியை, சுவிட்சர்லாந்து மற்றும்
ஜெர்மனி - தமிழ் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்.